top of page

சந்தனவெட்டையின் பல இன சமூகங்களுக்கு மத்தியில் ஒற்றுமையை வளர்ப்பது

sakshiselvanathan

என் பெயர் ஃபௌமி சாஹத், எனக்கு 23 வயது. மூதூரில் [1] ‘நல்லிணக்கத்திற்கான இளைஞர் குரல்’ என்ற சமூக செயற்பாட்டுத் திட்டத்தின் (SAP) குழுத் தலைவராக நான் SEDR[2] இன் ஆதரவுடன் எனது சமூகத்தை ஒன்றிணைப்பதிலும் எங்கள் கிராமத்தில் உறவுகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தினேன்.


2009 இல் முடிவடைந்த இலங்கையின் யுத்தத்தின் போது 'புதிய சந்தனவெட்டை' என்ற புதிய பகுதிக்கு வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்த இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்கள் சந்தனவெட்டையில்[3] உள்ளது. நாம் அனைவரும் பூர்வ குடிகளுக்கு சேர்ந்த ஒரு பெரிய சமூகத்தின் பகுதியாக இருந்தாலும், தசாப்த கால மோதலால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் எமக்கிடையில் பல தவறான புரிதல்களையும் அவநம்பிக்கையையும் உருவாக்கியது.


யுத்தம் முடிவடைந்த பின்னர் உள்நாட்டில் இடம்பெயர்ந்த கிராம மக்கள் திரும்பி வந்த நேரத்தில் போதிய நில ஒதுக்கீடுகளைப் பெறாதபோது எழுந்த நிலப்பிரச்சனைகள் உட்பட பல சம்பவங்கள் இந்தப் பிளவை ஆழமாக்கின. கிராமப்புற மேம்பாட்டுச் சங்கத்தில் (RDS)[4] தலைமைப் பாத்திரங்களை பெறுவது மீது கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்தன, மேலும் அதனால் அடிக்கடி வாக்குவாதங்கள் மற்றும் வாய் தகராறுகள் ஏற்பட்டன. கூடுதலாக, COVID-19 இன் போது முஸ்லிம் சமூகம் உலர் உணவுகளை விநியோகித்தது அவர்களது கலாச்சார நடைமுறைகளில் வேரூன்றியிருந்தாலும், மற்ற மத குழுக்களிடையே ஆத்திரத்தை தூண்டியது. சமூகங்களுக்கிடையில் அவநம்பிக்கை மற்றும் பகைமை ஆகியவை, பொது மயான நிலத்தைப் பயன்படுத்துவதில் தனி உரிமை கோரியதால் ஏற்பட்ட பதற்றத்தை அதிகரிக்க வழிவகுத்தது.


SEDR Active Citizens நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகப் பெற்ற பயிற்சியிலிருந்து எங்களின் கற்றலைக் கருத்தில் கொண்டு, எங்கள் SAP குழு இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடிவு செய்தது. ஒவ்வொரு மதக் குழுவிலிருந்தும் சமூகத் தலைவர்களைத் தனித்தனியாகச் சந்திப்பதன் மூலம் இந்த முரண்பாடுகளின் மூல காரணங்களை நன்கு புரிந்து கொள்ளத் தொடங்கினோம், மேலும் அதனூடாக புதியவர்களின் நில ஆக்கிரமிப்பு ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக இருப்பதை அறிந்துகொண்டோம்.


அனைத்து பாலினத்தவர்களும் தலைமைப் பாத்திரங்களை ஏற்றுக்கொள்வதற்கான சம வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக RDS ஆனது ஆண் மற்றும் பெண் தலைமைகளை உள்ளடக்கியது. எங்கள் பிரச்சனை பகுப்பாய்வு, பெண்களை தலைமையிடமாகக் கொண்ட RDSகளை விட, ஆண்கள் தலைமையிலான RDSகளில் பிணக்குகள் மற்றும் குழப்பங்களுக்கு அதிக வாய்ப்புள்ளது என்பதையும் வெளிப்படுத்தியது. இந்த நுண்ணறிவு, நாம் பெண்களின் RDSகளுடன் இணைந்து மாற்றுவழி பிணக்குத் தீர்வு (ADR) வியூகத்தை வடிவமைக்க வழிவகுத்தது.


புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் வளர்ப்பதற்காக, நாங்கள் பல சமூக நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தோம்:



• யுத்தத்துக்குப் பிந்தைய இணக்கமான எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நாங்கள் மூன்று சமூகங்களையும் அழைத்தோம்.


• பெண்களின் RDSகளுக்காக பிரத்யேகமாக ADR அமர்வை நடத்தி மத்தியஸ்தம் மற்றும் முரண்பாட்டைத் தீர்ப்பது பற்றிய அறிவை அவர்களுடன் பகிர்ந்து கொண்டோம்.


• சமூகத்தில் பெண்களிடையே சிறுவர் திருமணம் மற்றும் கல்வியறிவின்மை போன்ற தொடர்ச்சியான சமூகப் பிரச்சினைகளை கண்டறிந்து, தலைமைத்துவம், பிரச்சினைகளைக் கண்டறிதல் மற்றும் தீர்ப்பது, மற்றும் அவர்களை மேம்படுத்துவதற்கான ஊக்கமளிப்பு நிகழ்ச்சிகளை நாங்கள் நடத்தினோம்.


• நாங்கள் கூட்டு சமையல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தோம், அங்கு வெவ்வேறு இனக்குழுக்கள் உணவுப் பொருட்களை வழங்கினர் மற்றும் ஒன்றாக சமைத்தனர், இது ஒற்றுமையை வளர்ப்பதுக்கு வழி வகுத்தது.


• கூடுதலாக, விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்தினோம், அது அனைத்து சமூகத்தினரினதும் ஈடுபாட்டை ஊக்குவித்தது.




குடியிருப்பாளர்கள் மத எல்லைகளைத் தாண்டி அன்பான உறவுகளை உருவாக்கத் தொடங்கியது உள்ளிட்டு, சமூக நல்லிணக்கத்தை நோக்கி ஒரு நேர்மறையான மாற்றத்தை நாங்கள் மெதுவாகக் கவனித்தோம்.


இருப்பினும், எங்கள் பயணத்தில் பல சவால்கள் இல்லாமல் இல்லை. குறிப்பாக எங்களில் பெரும்பாலோர் பல்கலைக்கழக மாணவர்களாக பரீட்சைகளுக்கு படித்துக்கொண்டு இருந்ததால், சமூக செயற்பாட்டுத் திட்டத்தின் வேலைகளுடன் எங்கள் தனிப்பட்ட பொறுப்புகளை சமாளிப்பது கடினமாக இருந்தது. மேலும், எங்களின் பிரதான SEDR Active Citizens குழுவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்ததால், பல இன சமூகத்தின் நம்பிக்கையைப் பெறுவது கடினமாக இருந்தது. இதைப் போக்க, கிராமத்தில் உள்ள அனைத்து இனத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களின் ஆதரவைப் பெற்றோம், இது எங்களுக்கு நம்பிக்கையை வளர்க்கவும் சந்தேகத்தை குறைக்கவும் உதவியது. அரசாங்க அதிகாரிகள் மற்றும் சமூகத் தலைவர்களை சந்திப்பதில் நேரம் ஒதுக்குவதில் சிக்கல்களை நாங்கள் எதிர்கொண்டோம், ஏனெனில் அவர்களின் நேரம் பெரும்பாலும் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.


தனிப்பட்ட அளவில், இந்த அனுபவம் எனக்கு மிகவும் பலனளித்தது. தனிப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவது, குழுவை வழிநடத்துவது மற்றும் நேரத்தையும் நிதியையும் திறம்பட நிர்வகிப்பது போன்ற சவால்களை நான் எதிர்கொண்டேன். SEDR Active Citizens ADR பயிற்சியில் பங்கேற்பது குறிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தியது: இது ADR முறைகளுக்கு எனது முதல் வெளிப்பாடாக இருந்தது, மற்றும் இது எனக்கு வலுவான தலைமைத்துவ திறன்களை வளர்க்க உதவியது என்று நம்புகிறேன்.



SEDR Active Citizens நிகழ்ச்சியின் தாக்கம் என்னைத் தாண்டி விரிவடைந்தது. எங்கள் அணியைச் சேர்ந்த இரண்டு யுவதிகளும் இதற்கு முன் சமூகப் பணிகளில் ஈடுபட்டதில்லை. எங்கள் தலையீடுகளுக்குப் பிறகு, மூதூர் பிரிவில் அவர்களின் வாசிப்பு வட்டம் நிகழ்ச்சியை எளிதாக்குவதற்கு எங்கள் பெண் குழு உறுப்பினர்களில் ஒருவர் சிவில் சமூக அமைப்பால் அழைக்கப்பட்டார். கலாசார மரபுகளால் வீட்டிலே இருப்பதற்கு வற்புறுத்தப்பட்ட மற்றைய பெண் குழு உறுப்பினருக்கு, திருகோணமலையில் உள்ள பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியில் ஈடுபடுவதற்கு அவரது பெற்றோரால் அனுமதி வழங்கப்பட்டது.


நான் பட்டப்படிப்பைத் தொடரும் அதே நேரம், ஆசிரியராகவும் பணிபுரிகிறேன். ADR பற்றி நான் கற்றுக்கொண்டதை எனது மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் உறுதியாக உள்ளேன், மேலும் எனது சமூகத்தில் முரண்பாடுகளை அமைதியான முறையில் தீர்ப்பதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்த எதிர்ப்பார்க்கிறேன்.



[1] மூதூர் என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலைக்கு தெற்கே சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.


[2] பயனுறுதிமிக்கவகையில் பிணக்கை தீர்ப்பதற்கு ஆதரவளித்தல் (SEDR) திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் பிரிட்டிஷ் கவுன்சிலால் செயல்படுத்தப்படுகின்றது.


[3] சந்தனவெட்டை என்பது தமிழ் இனமாக தம்மை அடையாளப்படுத்தும் மக்களை கொண்ட ஒரு கிராமமாகும், இது மூதூரில் அமைந்துள்ளது.


[4] கிராமப்புற மேம்பாட்டுச் சங்கம் (RDS) - பாதிக்கப்படக்கூடிய மக்களின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார வளர்ச்சியை எளிதாக்குவதற்கும், அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும், அவர்களை அணிதிரட்டுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சமூக சேவை அமைப்பு.

 
 
 

Comments


எமது செய்தி மடலுடன் இணையுங்கள்

SEDR இலிருந்து காலாண்டு இற்றைப்படுத்தல்களைப் பெறுவதற்குப் பதிவு செய்யுங்கள். சமீபத்திய பயிற்சிகள், CSO நடவடிக்கைகள் மற்றும் விசேட நிகழ்வுகள் பற்றி நாம் உங்களுக்கு அறிவிப்போம்.

 சமர்ப்பித்தமைக்கு நன்றி!

தொடர்பு

கொள்ளுங்கள்

எம்மிடம் வாருங்கள்

Supporting Effective Dispute Resolution

19, 1/1, De Fonseka Place

00400 Colombo,

Sri Lanka.

எமக்கு எழுதுங்கள்

சமூக ஊடகங்களில் எம்மைப் பின்தொடரவும்

  • Twitter
  • Facebook logo
LOGOs FInal-04.png

HOME          ABOUT           PARTNERS           IMPACT           RESOURCES          OPPORTUNITIES           CONTACT           PRIVACY   

This website was created and maintained with the financial support of the European Union. Its contents are the sole responsibility of the British Council and do not necessarily reflect the views of the European Union.

© 2021 by Supporting Effective Dispute Resolution, British Council

bottom of page