எனது பெயர் மௌமிகா கவ்ஷானி, எனக்கு வயது 21 , நான் SEDR[1] இன் ஒரு
பகுதியாக இலங்கையின் ஊவா மாகாணத்தில்[2] உள்ள கொட்டல்பெத்த கிராமத்தில் நடத்தப்பட்ட ஒரு சமூக செயல்பாட்டுத் திட்டத்தின் (SAP) குழுத் தலைவியாக இருந்தேன். 'பிளவுபடுத்தப்பட்ட சமூகத்தை ஒன்றிணைத்தல்' என்ற தலைப்பிலான எங்கள் SAP, ஸ்வின்டன் தேயிலை தோட்டத்தில் உள்ள - வள்ளுவபுரம், பாரதிபுரம் மற்றும் அம்மன்புரம் ஆகிய - மூன்று உள்ளூர் சமூகங்களைச் சேர்ந்த தமிழ் இந்து மக்களை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்தியது.
எங்கள் சமூகத்தில் உள்ள முக்கிய பிரச்சினை, வள்ளுவபுரம் வாசிகளால் ஸ்விண்டன் கோவிலை[3] பிரத்தியேகமாக பயன்படுத்தியதில் இருந்து உருவானது, இது மத நடவடிக்கைகளில் பங்கேற்க மற்ற இரண்டு சமூகங்களுக்கும் சமமான அணுகலை மறுத்தது. இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திருவிழாவின் போது பதட்டங்கள் மற்றும் உடல் ரீதியான வன்முறைக்கு வழிவகுத்தது, அதன் பிறகு குழுக்களுக்கு இடையிலான உறவுகள் மோசமடைந்தன.
SEDR Active Citizens திட்டத்தின் ஒரு பகுதியாக, நாங்கள் மாற்றுவழி பிணக்குத் தீர்வு (ADR) பயிற்சியை மேற்கொண்டோம். இது, ஒட்டுமொத்த பிரச்சனை-தீர்வு செயல்முறையின் ஒரு பகுதியாக, பிணக்குக்கான மூல காரணத்தை முதலில் கண்டறிய கற்றுக் கொடுத்தது. இதைக் கருத்தில் கொண்டு, எங்கள் SEDR Active Citizens குழு, மூன்று கிராமங்களுக்கும் தனித்தனியாகச் சென்று, இந்த முரண்பாடுகளுக்கான அடிப்படைக் காரணங்கள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கான எங்கள் திட்டத்தை உள்ளூர் சமூகங்களுடன் கலந்துரையாடியது. எங்கள் முன்முயற்சியைப் பற்றி கோவில் பூசாரி ('ஐய்யர்' என்றும் அழைக்கப்படுபவர்) மற்றும் கிராம அலுவலருடன்[4] பேசினோம். அதன் பிறகு, காவல்துறை, ஐய்யர் மற்றும் பிற கிராமவாசிகள் உட்பட முக்கிய பங்குதாரர்களை ஒரு நோக்குநிலை அமர்வுக்கு அழைத்தோம், அங்கு எங்கள் SEDR Active Citizens சமூக செயல்பாட்டுத் திட்டத்தின் நோக்கங்களை விளக்கினோம்.
கோவில் நிர்வாக உறுப்பினர்களுடன், மூன்று கிராமங்களுக்கும் சமமாக சமய வழிபாடுகளில் பங்கேற்பதற்கான பட்டியலை அமைக்க வேண்டும் என்பதை பற்றி கலந்துரையாடினோம். இது, கோவிலை சுத்தம் செய்வதற்கான வெற்றிகரமான சிரமதான[5] நிகழ்வுக்கு வழிவகுத்தது. அதைத் தொடர்ந்து மூன்று கிராமங்களிலிருந்தும் பங்கேற்புடன் இடம்பெற்ற ஒரு பெரிய இந்து பிரார்த்தனை வழிபாடு, நல்லிணக்க உணர்வை வளர்த்தது.
கூடுதலாக, சமூக உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ADR இன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு சிறிய செயலமர்வை நடத்தினோம். மேலும், மூன்று கிராமங்களிலிருந்தும் இளைஞர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இளைஞர் கழகத்தை நாங்கள் ஒன்றுகூடி உருவாக்கினோம்.
அது இப்போது அப்பகுதியில் நடத்தப்படும் சமூக, கலாச்சார மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்கிறது. உதாரணமாக, அனைத்து இளைஞர்களுக்குமான ஒரு போட்டி மற்றும் மூன்று கிராமங்களிலிருந்தும் பெண்களுக்கான ஒரு தனி போட்டியுமென நாங்கள் இரண்டு போட்டிகளை ஏற்பாடு செய்தோம். பெண்களுக்கான போட்டியானது ஒரு அரிய மற்றும் வெற்றிகரமான நிகழ்வாக அமைந்தது, இது சமூக ஒற்றுமையை மேலும் கட்டியெழுப்பியது.
இந்த தலையீடுகள் மூலம், நாம் நேர்மறையான மாற்றங்களைக் கண்டோம். கோவிலில் சிறுவர்களுக்கான இந்து சமயப் பாடசாலை மீண்டும் தொடங்கப்பட்டு, மூன்று சமூகத்தினரின் உற்சாகமான பங்கேற்புடன் வாரந்தோறும் செயல்படுகிறது.
SEDR Active Citizens திட்டத்தின் மூலம் நான் பெற்ற ADR பயிற்சியிலிருந்து, பிணக்குகளைத் தீர்ப்பதற்கு காவல்துறையை நாடுவது மட்டுமே போதாது என்பதை அறிந்துகொண்டேன். முழுமையான பிரச்சினைத் தீர்வு திறன் மற்றும் திட்ட மேலாண்மை ஆகியவற்றிலும் நான் திறன்களைப் பெற்றேன். மேலும் தமிழ் சமூகங்களுடன் பணிபுரியும் ஒரு சிங்களப் பெண் என்ற வகையில், மதிப்புமிக்க வலையமைப்புகளை உருவாக்கி, கலாச்சார வேறுபாடுகளை சிறப்பாக வழிநடத்த கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில், எங்கள் திட்டம் குறித்து சந்தேகம் இருந்தது மற்றும் வயதான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகளிடமிருந்து குறைந்த பங்கேற்பு இருந்தது. எவ்வாறாயினும், விடாமுயற்சி மற்றும் ஊவா சக்தி அமைப்பு மற்றும் SEDR இன் ஆதரவுடன், அவர்களின் பங்கேற்பையும் ஒத்துழைப்பையும் நாங்கள் பெற்றோம்.
தனிப்பட்ட முறையில், சமூகத்துடன் இணைவதற்கும் பல இனச் சூழலில் பணியாற்றுவதற்கும் எனது திறமையில் நான் வளர்ந்துள்ளேன். ஒரு குழுவாக, எங்கள் அணியில் உள்ள தமிழ் இளைஞர்கள் இப்போது தங்கள் கிராமங்களில் அதிக அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதையும், சமூக நடவடிக்கைகளில் தன்னம்பிக்கையுடன் பங்கேற்பதையும் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்.
முன்னோக்கிப் பார்க்கும்போது, எனது சமூகத்தில் இந்தப் பணியைத் தொடர நான் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன். இந்த SAPயை செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக நாங்கள் உருவாக்கிய இளைஞர் கழகத்தை நான் தொடர்ந்து வழிநடத்தி வருகிறேன், மேலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்த எனது சமூக தலைமைத்துவ திறன்களை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளேன்.
[1] பயனுறுதிமிக்கவகையில் பிணக்கை தீர்ப்பதற்கு ஆதரவளித்தல் (SEDR) திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் பிரிட்டிஷ் கவுன்சிலால் செயல்படுத்தப்படுகின்றது.
[2] ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் லுனுகல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஒரு கிராமம்.
[3] ஒரு தமிழ் இந்து கோவி ல்
[4] ‘கிராம அலுவலர்’ என்பவர் இலங்கை அரசாங்கத்தின் அடிமட்ட நிர்வாகியாவார், மேலும் வரையறுக்கப்பட்ட ஒரு பகுதிக்கு பொறுப்பாக்க இருப்பார்.
[5] 'சிரமதானம்' என்பது உழைப்பை பரிசாக கொடுப்பது என்பதை குறிக்கும். இலங்கையை பொறுத்தவரை இது, ஒரு உள்ளூர் சமூகத்தில் தன்னார்வலர்கள் இணைந்து உதவி அல்லது சேவைகளை வழங்கும் ஒரு நிகழ்வு அல்லது திட்டத்தை குறிக்கிறது.
Comments