top of page

Light for Kick: விளையாட்டு மூலம் ஒற்றுமையைக் கண்டறிதல்

Updated: Feb 12, 2023


நான் இலங்கையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இறக்காமத்தைச் சேர்ந்த முஹம்மத் ரஷீத் நஸ்ருல்லா. சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதில் நான் ஆர்வமாக உள்ளேன். இதுவே என்னை SEDR Active Citizens பயணத்தில் இணைந்து தன்னார்வத் தொண்டு செய்ய வழிவகுத்தது, இதன் மூலம் ஒரு சமூக செயற்பாட்டுத் திட்டத்தை உயிர்ப்பிக்க எங்களுக்கு ஒரு விலைமதிப்பற்ற வாய்ப்பு கிடைத்தது.


இறக்காமம் பிரதேசத்தில் உள்ள பொதுவான பாடசாலை விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு நடவடிக்கைகளில், முக்கியமாக கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்டத்தில், ஈடுபடும் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிணக்குகளுக்கு எமது குழுவினர் தீர்வுகளை கண்டறிந்தனர்.இதன் மூலம் அணிகளுக்கிடையே ஒற்றுமையும், விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துதல் மூலம் விளையாட்டு மைதானத்தைப் பயன்படுத்துவதற்கான சம வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் என நம்பப்பட்டது. இறக்காமம் சமூகத்தில் உள்ள சுமார் 300 கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட வீரர்களுக்கு பயனளிக்கும் நோக்கத்தை இந்த திட்டம் கொண்டிருந்தது, மேலும் இதுவே எங்கள் Active Citizens குழு உறுப்பினர்களை ஊக்கப்படுத்தியது. இளைஞர் சமூகத்தினூடாக நல்லிணக்கத்தை உருவாக்குவதும், எப்போதும் ஒற்றுமையை ஊக்குவிப்பதுமே எங்களின் பிரதான இலக்காக இருந்தது.


இப்பகுதியில் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு ஏற்ற ஒரு விளையாட்டு மைதானம் மட்டுமே இருந்ததால், அதன் பயன்பாட்டைப் பற்றி அடிக்கடி வாய்ச்சண்டைகள் மற்றும் சில சமயங்களில், உடல் ரீதியான சண்டைகள் கூட ஏற்பட்டிருக்கின்றன. எனவே, எங்கள் சமூக செயற்பாட்டுத் திட்டத்தின் கவனம் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டறிவதில் இருந்தது. மூன்று விளையாட்டுக் குழுக்களுக்கிடையில் பயனுள்ள பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை உருவாக்குவதன் மூலம், அவர்கள் அனைவரும் ஒரே மைதானத்தை எந்தவித மோதல்களும் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய ஒரு பொறிமுறையைக் கொண்டு வர ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் எண்ணினோம்.


பாடசாலை அதிபர், சனசமூக மத்தியஸ்த சபை[1] மற்றும் விளையாட்டுக் குழுக்களை அணுகி நம் செயற்பாட்டை தொடங்கினோம். இரண்டு விளையாட்டுக் கழகங்களின் முக்கிய உறுப்பினர்களிடம் பேசியதில், அணிகள் அனைத்தும் விளையாட்டு மைதானத்தை திறம்பட பயன்படுத்துவதற்காக சரியான நேரங்களை ஒதுக்குவதற்குப் இனனிந்து பணியாற்றுவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. அதற்கான ஆரம்பகட்ட தயாரிப்புத் திட்டமும் இரு அணிகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும், பிரதேச சபைக்கு[2] அழுத்தம் செலுத்துவதன் மூலம் பிரகாசமான ஒளிரும் விளக்குகளை அமைக்கவும் முன்மொழியப்பட்டது. அது மூலம் விளையாட்டு நேரத்தை மாலை வரை நீட்டிக்க முடியும், மற்றும் விளையாட்டு மைதானத்தை ஒரே நேரத்தில் இரண்டு அணிகள் பயன்படுத்த முடியும்.

விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த பிணக்குகளை உரிய தீர்வு காணப்படவில்லை. பிணக்குகள் மிகவும் தீவிரமானதாக மாறி, பெரும்பாலும் காவல்துறையின் ஈடுபாட்டையும் கொண்டது, மற்றும் இந்த இளம் வீரர்களின் எதிர்காலத்திற்கு இடையூறாகவும் அமைந்திருக்கும். கழகங்களை ஒன்றிணைத்து ஒரு தீர்வை எட்டுவது மிகவும் சவாலானதாக இருந்தபோதிலும், பாடசாலை அதிபர், சனசமூக மத்தியஸ்த சபை மற்றும் விளையாட்டுக் குழுக்களின் கருத்துக்களை உள்வாங்கி, பகல் மற்றும் மாலை நேரங்களில் எந்த மோதல்களும் இல்லாமல் ஒரே விளையாட்டு மைதானத்தை அணிகள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான அடிப்படையை எம்மால் உருவாக்க முடிந்தது. இது அணிகளுக்கிடையேயான பதட்டத்தை குறைத்து அவர்களை ஒன்றிணைத்தது, ஏனெனில் அவர்கள் வளாகத்தை ஒன்றாக சுத்தம் செய்வதற்கான சிரமதான நடவடிக்கையில் பங்கேற்கவும் ஒப்புக்கொண்டனர்.


இந்தத் திட்டம் பல்வேறு விளையாட்டுக் குழுக்களுக்கு பொதுவான விளையாட்டு மைதானத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், அனைத்து சமூகங்களிலிருந்தும் வரும் பல்வேறு விளையாட்டுத் தலைவர்கள் கொண்ட இளைஞர் குழுவை உருவாக்குவதற்கான ஆற்றலையும் கொண்டுள்ளது. பிணக்கு விளையாட்டு மைதானத்தைப் பற்றியது என்றாலும், உள்ளூர் சமூகத்தில் அது ஏற்படுத்திய வித்தியாசத்தின் காரணமாக அதன் தாக்கம் மிகப்பெரியது. இது, எந்தவொரு விளையாட்டிலும் உண்மையான ஒற்றுமை மற்றும் விளையாட்டு மனப்பான்மை முக்கியம் என்பதை வீரர்கள் உணர அனுமதித்துள்ளது.


தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை, மேலோட்டமான பார்வையில் விஷயங்கள் எளிதில் தீர்க்கக்கூடியதாகத் தோன்றினாலும், நாங்கள் திட்டத்தில் அடியெடுத்து வைத்தபோதுதான் அதில் உள்ள நுணுக்கங்களை உணர்ந்தோம். மேலும் அவ்வாறு செயற்பட்டதன் மூலம், நாங்கள் விலைமதிப்பற்ற அனுபவத்தையும் தன்னம்பிக்கையையும் பெற்றோம்.

[1] இலங்கை முழுவதும் 329 சனசமூக மத்தியஸ்த சபைகள் உள்ளன, இங்கு 8,400 க்கும் மேற்பட்ட நன்கு பயிற்சி பெற்ற தன்னார்வ மத்தியஸ்தர்கள் ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்ட மத்தியஸ்த அணுகுமுறைகளைப் பயன்படுத்தி உள்ளூர் சமூகங்களில் வருடத்திற்கு 200,000 க்கும் மேற்பட்ட பிணக்குகளைத் தீர்க்கின்றனர். [2] பிரதேச சபைகள் இலங்கையில் மூன்றாம் நிலை நகராட்சிகளுக்கு தலைமை தாங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி அமைப்புகளாகும்.

20 views0 comments

Comments


bottom of page