top of page

அட்டாளைச்சேனையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல்


நான் மொஹமட் பாரூக் நஜீத் (28), அம்பாறை அட்டாளைச்சேனையில்[1] SEDRxActiveCitizens[2] திட்டமான 'வாழ்நாள் கனவு'க்கு நான் தலைமை தாங்கினேன். பல வருடங்களாக பிணக்குகளால் பிளவுபட்டுள்ள எமது சமூகத்தை ஒன்றிணைப்பதே எமது இலக்காக இருந்தது.

 

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவிடன் இயங்கும் SEDR திட்டம் மற்றும் எங்கள் உள்ளூர் பங்காளியான முஸ்லிம் ஏட் ஸ்ரீலங்கா (Muslim Aid Sri Lanka) உடன் இணைந்து, 25 நபர்களைக்கொண்ட SEDR Active Citizens குழுவின் ஒரு பகுதியாக, நான் மாற்றுவழி பிணக்குத் தீர்வு (ADR) இல் பயிற்சி பெற்றேன். பிணக்குகளைக் கண்டறிவதற்கும், அவற்றின் மூலக் காரணங்களை படிப்படியாக  கருத்தில்கொள்வதற்கும், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகளைத் தேடுவதுற்கு மற்றும் அனைவருக்கும் வெற்றி ஈட்டும் தீர்வுகளைக் கண்டறிய முயற்சிப்பதற்கும், பயிற்சி அமர்வுகள் எனக்கு உதவியது. எங்கள் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளவும் இந்தப் பயிற்சி எனக்கு உதவியது.

 

இந்த புதிய அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்துவதற்காக, கடந்த காலங்களில் காணிப்பிரச்சனைகள் மற்றும் அரசியல் மனக்குறைகள் காரணமாக அவர்களுக்கிடையே பல பிரச்சனைகளை முகம்கொடுத்த அண்டைய கிராமங்களான பாலமுனை மற்றும் ஒலுவில்[3] இல் வசிக்கும் முஸ்லிம் சமூகங்கள் இரண்டின் மீது நமது Active Citizens குழு கவனம் செலுத்தியது.

 

எங்கள் பிரச்சனை பகுப்பாய்வில் சமூகத்தில் உள்ள பெரியவர்கள் மற்ற கிராமத்தின் தவறான செயல்களைப் பற்றி திரும்பத் திரும்பக் கதைகளை சொல்லி வருவதும், இது மக்களை கோபப்படுத்தியது என்பதும் தெரியவந்தது. பிணக்குகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக,  ஒரு கிராமம் ஒரு பிரிவினைவாதக் குழுவின் தளமாக இருப்பதாக வதந்திகளை பரப்புவதில் கூட அரசியல்வாதிகளின் கை உள்ளது என்பதை முன்னாள் கிராம சேவைகள் அலுவலரிடமிருந்து[4] நாங்கள் அறிந்தோம். இந்த அச்சமும் தவறான தகவல்களும் இரு கிராம மக்களிடையே அவநம்பிக்கையையும் சில சமயங்களில் வன்முறையையும் ஏற்படுத்தியது.

 

2010 ஆம் ஆண்டு பிரதேச சபையினால் பாலமுனைக்கு கிராமப் பெயர்ப்பலகையை வைத்து அதன் எல்லைகளை முறையாகக் குறிக்க முற்பட்டது, ஆனால் ஒலுவில் மக்கள் அதனை விரும்பாமல் அப்புறப்படுத்தியதால் நிலைமை மோசமாகியது. மேலும், குறிப்பாக கோவிட்-19 காலப்பகுதியில், அவர்கள் அதிக மக்கள்தொகை மற்றும் அதிக அரசியல் ஆதரவைக் கொண்டிருந்ததால், அபிவிருத்தித் திட்டங்களுக்காக பிரதேச சபையிடம் இருந்து அதிகமான வளங்களைப் பாலமுனை பெற்றதாக அண்டை கிராமம் உணர்ந்தது.

 

எங்கள் ADR பயிற்சியின் திறன்களைப் பயன்படுத்தி இந்த சமூகங்களை நெருக்கமாகக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு, ஆரம்ப சந்தேகங்கள் இருந்தபோதிலும், உள்ளூர் இளைஞர்களை ஈடுபடுத்திகொண்டு பள்ளிவாசல் தலைவர்கள் உட்பட முக்கிய பங்குதாரர்களுடன் உரையாடல்களை ஏற்பாடு செய்தோம்.


பிரதேச செயலகத்தில் உள்ள அரச அதிகாரிகளின் உதவியுடன், இளைஞர்கள் , பெரியவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளை ஒன்றுகூட்டி கிராம பாரம்பரியத்தின் அடிப்படையில் கலாச்சார நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தினோம். எமது கடற்கரை சுத்தப்படுத்துதல் திட்டம், கிராமங்களை ஒரு பொதுவான இலக்கை நோக்கி மேலும் ஒன்றிணைத்தது.

 

இரு சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதில் ஒரு முக்கியமான படியாக, இரு கிராமங்களை மற்றும் அட்டாளைச்சேனை நகரைச் சேர்ந்த 40 இளைஞர்களைக் கொண்ட இளைஞர் நல்லிணக்கக் குழுவை உருவாக்கல் அமைந்தது.


சமூக அளவிலான பிணக்குகளை எவ்வாறு கண்டறிவது மற்றும் நன்கு புரிந்துகொள்வது என்பதில் அவர்களின் சொந்த திறனை வளப்படுத்துவதற்காக, இந்த இளைஞர் குழவானது ADR பொறிமுறைகள் மற்றும் அணுகுமுறைகள் பற்றிய பயிற்சியையும் பெற்றது. மேலும், இந்த இளைஞர் நல்லிணக்கக் குழு அட்டாளைச்சேனை சனசமூக மத்தியஸ்த சபையுடன் நெருக்கமாகச் செயற்பட்டு, அந்த உறுப்பினர்களின் அனுபவத்தைப் பயன்படுத்தி, எமது சமூகத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழிகாட்டுதல் பெற்றுக்கொண்டது.

 

எங்கள் சமூக நடவடிக்கையை செயல்படுத்துவது எப்போதும் எளிதானதாக அமையவில்லை. நாங்கள் சவால்களை எதிர்கொண்ட போதிலும் முஸ்லிம் ஏட் ஸ்ரீலங்கா மற்றும் எங்கள் வழிகாட்டிகளின் ஆதரவுடன் நாங்கள் தொடர்ந்து முன்னோக்கிச் சென்றோம். திரும்பிப் பார்க்கும்போது, நாங்கள் சாதித்ததைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். முரண்பட்ட குழுக்களிடையே சிறந்த புரிதலை நாம் எளிதாக்கும் போது, சமூகங்கள் ஒன்றிணைகின்றன, மேலும் இது கடினமான சவால்களைக் கூட கடக்க அவர்களுக்கு உதவுகிறது என்பதை எங்கள் பணி எடுத்துக்காட்டுகிறது.


[1] அட்டாளைச்சேனை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும்.


[2] Active Citizens என்பது கலாச்சாரங்களுக்கு இடையேயான உரையாடல் மற்றும் சமூக தலைமையிலான சமூக மேம்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு சமூக தலைமைத்துவ பயிற்சி முறையாகும். இது, சமூக அளவிலான பிணக்குகளைத் தீர்ப்பதில் மாற்றுவழி பிணக்குத் தீர்வு வழிமுறைகளை ஆதரிக்கும் SEDR இன் அணுகுமுறையில் முக்கிய பங்கு வகிக்கிறது.


[3] பாலமுனை மற்றும் ஒலுவில் இரண்டும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிறிய கிராமங்களாகும், முக்கியமாக விவசாயம் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.


[4] ஒரு ‘கிராம சேவைகள் அலுவலர்’, இலங்கையில் ஓர் வரையறுக்கப்பட்ட பகுதிக்கு பொறுப்பான, அடிமட்ட நிர்வாக உத்தியோகத்தர் ஆவார்.

25 views0 comments

Comments


bottom of page