எனது பெயர் நான்சி, நான் இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள மொனராகலை நகரத்தைச் சேர்ந்த ஓர் Active Citizen. நாங்கள் தீர்வுக்காக எடுத்துக் கொண்ட பிரச்சினை, சிங்களவர் மற்றும் தமிழர்கள் வசிக்கும் அருகிலுள்ள தேங்காமலை[1] கிராமத்துடன் தொடர்புடையது. ஒரு நாட்டுப்புற ஏழை கிராமமான தேங்காமலை முதலில் சிங்களவர்களாலும் பின்னர் தமிழர்களாலும் நிரம்பியது. அந்த கிராமத்திற்கு ‘தேங்காமலை’ என்ற பெயரை சிங்களவர்கள் பயன்படுத்த மறுத்ததையும் அது பல சிரமங்களை ஏற்படுத்தியதையும் அறிந்தோம். கிராமத்தில் உள்ள மக்கள் கடந்த காலங்களில் இனவாத பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர், மேலும் சிங்களவர்கள் அருகிலுள்ள மற்றொரு சிங்கள கிராமத்துடன் இணைத்துக்கொண்டதாகவும், அவர்கள் அந்த முகவரியை பயன்படுத்த விரும்புவதாகவும் கூறுகிறார்கள்.
பிரச்சினையை நன்கு புரிந்து கொள்ள, நாங்கள் முதலில் கிராமவாசிகள் இடையே ஒரு கருத்தாய்வை மேற்கொண்டோம். இப்பிரச்சினையால் சில கிராமவாசிகளுக்கு வீடுகளுக்கு கடிதங்கள் வரவில்லை என்றும், சில கடிதங்கள் கடைகளில் கொடுக்கப்பட்டதாகவும் அதனால் மக்களால் தாமதமாக பெறப்படுவதாகவும் அறிந்தோம். உதாரணமாக, தேவன் என்ற ஆசிரியர், இந்தப் பிரச்சினை காரணமாக தனது கிராம சேவக நியமனக் கடிதத்தை பெறவில்லை என்று கூறினார். கிராம மக்கள் பாதைகள் சரியில்லாததால் அவசர சிகிச்சை பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர், மேலும் அவர்கள் பேருந்துகளில் இறங்கும்போது இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.
ஊருக்கு பெயர் பலகை இல்லை என்பது நாங்கள் கண்டுபிடித்த ஒரு முக்கியமான விடயமாகும்.
எங்களுடைய Active Citizens பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மாற்றுவழி பிணக்குத் தீர்வு முறைகளைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சினையைத் தீர்க்க 8 செயல்முறை நடவடிக்கைகளை முன்வைத்தோம். முதலில் கிராம சேவகரின் ஊடாக இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி, பின்னர் மதத் தலைவர்கள், அரச ஊழியர்கள் மற்றும் கிராமத்தின் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்தோம். பின்னர் சிங்கள மற்றும் தமிழ் கிராம மக்களிடம் தனித்தனியாக பேசினோம். அதன் பின்னர், சிங்கள மற்றும் தமிழ் கிராம மக்களை ஒன்றிணைத்து பிரச்சினையை கலந்துரையாடினோம். மக்களுடன் பல கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புக்களின் பிறகு, இரு இனத்தவர்களும் பங்கேற்கும் ஒரு சிரமதான நடவடிக்கையை நாங்கள் கிராமத்தில் மேற்கொண்டோம். இறுதியாக, உள்ளூர் ஊவா சமூக வானொலியில் சிங்கள, தமிழ் மக்களின் பங்கேற்புடன் “மக்கள் குரல்” என்ற நிகழ்ச்சியை நடத்தி கிராமத்திற்கு பெயர் பலகையை வழங்கினோம்.
இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டோம்.
இதுபோன்ற ஒரு முயற்சியில் மக்களை பங்கேற்க வைப்பது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. நீண்ட கால அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் காரணமாக இவ்விரு இனக்குழுக்களையும் ஒன்றாகக் கொண்டு வந்து பிரச்சினையை கலந்துரையாடுவதும் கடினமாக இருந்தது. நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட நாம் இத்திட்டத்தை முன்னெடுப்பதில் சவால்களை எதிர்கொண்டோம். இதனால் எங்களுக்கு சிறிது கால தாமதம் ஏற்பட்டு, மூன்று மாதங்களில் முடிக்கப்படக்கூடிய இந்த திட்டத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டியிருந்தது.
நாங்கள் எங்கள் திட்டத்தை முழுமையாகவும் பூர்த்தியாகவும் முடித்துவிட்டோம் என்று நாம் நம்புகிரோம்.
அதன் மூலம், சில பெரிய வெற்றிகளையும் பெற முடிந்தது. கிராம சேவகர், சமயத் தலைவர்கள் மற்றும் அரச ஊழியர்களுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொள்ள முடிந்தது. சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே அதிக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடிந்ததோடு, சிங்களவர்கள் எம்முடன் (தமிழர்களுடன்) நெருங்கி பழகுவதை அனுபவிக்க முடிந்தது. இந்தச் செயலில் பங்கேற்பதற்காக உள்ளூர் பங்குதாரர்களின் ஒரு பெரிய குழுவை எங்களால் ஒன்றிணைக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், Active Citizens பயிற்சித் திட்டத்தில் பங்கேற்ற எங்களுக்கும் அப்பால் சென்று மத, சமூக மற்றும் அரச தலைவர்கள் இணைந்ததுடன், கிராம மக்களிடையே சிறந்த உறவுகளை வளர்க்க உதவுவதும் அடங்கும்.
[1] இது ஒரு தமிழ் மொழிப் பெயர்
Comments